வியாழன், 29 நவம்பர், 2012

BSNL ன் கைப்பேசி சேவையும்(?), அவர்களின் கையாலாகாத வாடிக்கையாளர் உதவி(!) மய்யமும்



அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் எப்பொழுதுமே 
மெதுவாகத்தான் செயல்படும் என்பது எல்லோரும் சொல்வது.
அது உண்மையும் கூட. மேலும் அவர்களிடம் உதவி நாடி 
சென்றால் நமக்கு பலன் கிடைக்காது என்று தெரிந்தும் நாம் 
வேறு வழியின்றி பல நேரங்களில் அவைகளையே சார்ந்து இருக்கவேண்டியிருக்கிறது என்பது தான் வேதனை.  

நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப்   
பார்க்கும் பொழுது கூடியவரையில் அரசு நிறுவனங்களை 
நாடாமல் இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

எனது மாமா மகன், அவரது கைப்பேசி இம்மாதம் 
மூன்றாம் தேதியிலிருந்து இணைப்பு கிடைக்காததால் 
பயனற்று இருப்பதாகவும் பலமுறை புகார் செய்தும் 
ஒன்றும் நடக்கவில்லை என்றும் சொன்னார். முடிந்தால் 
நீயும் புகார் செய்து பார். என்றார்.

உடனே நேற்று மாலை BSNL ன் Help Line எண்ணான  
94440 24365 க்கு எனது தொலைபேசி மூலம் தொடர்பு 
கொண்டேன். வழக்கம்போல் முன்பே பதிவு செய்யப்பட்ட 
குரல் ஒலித்தது. தமிழில் பேச எண் 1 ஐயும் 
ஆங்கிலமானால் எண் 2 ஐயும்,  இந்தியில் பதில் 
வேண்டுமென்றால் எண் 3 ஐயும் அழுத்துமாறு 
சொல்லப்பட்டது.

நான் தமிழில் பேச  எண் 1 ஐ தேர்ந்தெடுத்தேன். அங்கும் 
ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு எண் தரப்பட்டது. 
எனது உறவினரின் கைப்பேசி மாத இறுதியில் கட்டணம் 
கட்டும் சேவை (Post Paid Connection) ஆதலால் அதற்காக 
உள்ள 2 ஆம் எண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.

அங்கும் ஒவ்வொரு சேவையைப்பற்றி அறிய வெவ்வேறு 
எண் கொடுக்கப்பட்டது. கைப்பேசி 20 நாட்களாக  வேலை 
செய்யவில்லை என விவரமாக சொல்லவேண்டி இருந்ததால், 
சேவை மய்ய அதிகாரியை தொடர்பு கொள்ளும் எண்ணான 
9 ஐ தொடர்பு கொண்டேன்.

சிறிது நேரம் காக்க வைத்த பின் ஒருவர் தொடர்பில் வந்து 
பேசினார். என்ன வேண்டும் உங்களுக்கு? எதற்காக 
கூப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டார். நான் பழுதடைந்த கைப்பேசி 
எண்ணை சொல்லி, அது 3 ஆம் தேதியிலிருந்து செயலிழந்து 
இருக்கிறது அது குறித்து பலமுறை புகார் செய்தும் எந்த 
நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே கடிதம் 
மூலம் புகார் செய்ய விரும்புகிறேன்.
யாருக்கு கடிதம் ழுதவேண்டும்? என்றேன்.


அதற்கு அவர் ஒழுங்காக மாதக் கட்டணத்தை செலுத்தினீர்களா?’ 
என்றார். நான் மாதக்கட்டணம் Electronic Clearing Service மூலம் செலுத்துவதால் அந்த கேள்விக்கே இடமில்லை. என்றேன். 
உடனே அடுத்த கேள்வி கேட்டார் பாருங்கள். அதைக் 
கேட்டதும் எனக்கு சுருக்கென கோபம் வந்தது

எப்போதிலிருந்து உங்கள் Land Line வேலை செய்யவில்லை?’ 
என்பதுதான் அந்த கேள்வி. நான் ஆரம்பிக்கும் போதே 
கைப்பேசி எண்ணை சொல்லி, அது வேலை செய்யவில்லை 
என்றுதான் சொன்னேன். அப்படி இருந்தும் அந்த கேள்வியைக் 
கேட்டதும் எனக்கு கோபம் வராமல் என்ன செய்யும்.

அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னங்க, நான் 
ஆரம்பிக்கும்போதே Mobile Phone வேலை செய்யவில்லை 
என்றுதானே சொன்னேன். நீங்கள் என்னவென்றால் நான்   
சொன்னதை கவனிக்காமல் Landline பற்றி கேட்கிறீர்களே?’ 
என்றேன்.

அதற்கு அவர்  நீங்கள் Landline லிருந்து தானே பேசுகிறீர்களே 
அதனால் கேட்டேன். என்றார். (என்ன Logic பாருங்கள்!) 
அப்போதுதான் கோபத்தோடு சொன்னேன். Mobile Phone  
சரியில்லை என்றால் Landline மூலம் சொல்லக்கூடாதா? 
என்ன இவ்வாறு பொறுப்பில்லாமல் பதில்அளிக்கிறீர்கள்? வாடிக்கையாளர்கள் என்றால் உங்களுக்கென்ன  
கிள்ளுக்கீரையா? எங்களுக்கு உதவத்தானே நீங்கள் 
இருக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை. 
அதை புரிந்துகொள்ளுங்கள். சரி இனி உங்களோடு பேசி 
பயன் இல்லை. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து 
கொள்ளலாமா?’ என்றேன். அவ்வளவுதான்.அவர் 
இணைப்பைத் துண்டித்துவிட்டார்!  

இதுதான் அந்த சேவை மய்யம் செய்யும் சேவை 
எனப் புரிந்துகொண்டேன். எனக்கு ஏற்பட்ட ஐயம் இதுதான். 
இவ்வாறு  நல்ல சேவையைக் கொடுத்தால் 
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வேறு நிறுவனங்களை 
தேடி சென்றுவிடுவார்கள் என்பதுதான் அவர்களின் 
எண்ணமா? அல்லது அவர்களால் அந்த சேவையை 
செய்ய முடியவில்லையா?

காரணம் எதுவாயினும் இப்போதாவது  BSNL விழித்துக் 
கொள்ளாவிட்டால் தனியார் காட்டில் மழைதான். ஏனென்றால் 
இப்போது அதே எண்ணோடு வேறு தொலைத்தொடர்பு 
நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும் வசதி இருப்பதால்  
அநேகம் பேர் மாற வாய்ப்புண்டு. 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திங்கள், 26 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 17



கல்விக்கடனை 72 மாதத் தவணைகளில் திருப்பி செலுத்தலாம்
என்கிறபோது, ஏன் 36 மாதங்களில் கட்டி கடனை முடிக்க
விரும்புகிறீர்கள்?’ என அந்த  கல்விக் கடன் பெற்றிருந்த இளம் பொறியாளரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சார். உங்கள் வங்கி கடன் தந்திருக்காவிட்டால்,
என்னால் படிப்பை முடித்திருக்கமுடியாது. மேலும் நல்ல
சம்பளத்தோடு கூடிய வேலையும் கிடைத்திருக்காது.

வங்கி உதவியால் பெற்ற படிப்பால் எனக்கு நல்ல
மாத வருமானம் கிடைக்கும்போது, வங்கிதான் நீண்ட கால  
தவணை தருகிறேதே என்று கடனை கட்டாமல்,
கடனாளியாக இருக்க நான் விரும்பவில்லை.

மேலும் நான் சீக்கிரம் கடனை கட்டினால் என்னைப் போன்ற
மற்றைய மாணவர்களுக்கு நீங்கள் மேலும் கடன் தரலாமே
என்பதால்தான் கடனை சீக்கிரம் முடிக்க விரும்புகிறேன்.
என்றார்.

வங்கிக் கடனைபெற்று அதனால் பயன் அடைந்த சிலர்
அந்த கடனையே மறந்துவிடுகின்றபோது உலக அனுபவமே
இல்லாத அந்த இளைஞர் சொன்ன அந்த பதில் உண்மையில்
நான் எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் தான், வயதுக்கும்,
அறிவு முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை என முன்பு
எழுதியிருந்தேன். (கல்விக் கடன் பெற்று அதை ‘மறந்த’வர் பற்றி
அடுத்து எழுத இருக்கிறேன்.)

நான் அவரை அந்த நல்ல எண்ணத்திற்காக பாராட்டிவிட்டு,
நீங்கள் இவ்வாறு முன்கூட்டியே கடனை திருப்பிசெலுத்த
இருப்பது உங்கள் தந்தைக்குத் தெரியுமா?’ எனக் கேட்டேன்.

அப்படி கேட்டதன் காரணம், அந்த கடன் அவர் பேரிலும் மற்றும்
அவரது தந்தை பேரிலும் தான் கொடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் கடன் தரும்போதே அவர் தந்தையிடமும் கடனை
படித்து முடித்து வேலை கிடைத்ததும் 7 ஆண்டுகளில் திருப்பி
செலுத்தலாம் என சொல்லியிருந்தேன்.

அதற்கு அவர் எனது தந்தையிடம் சொல்லிவிட்டேன்.
“இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நாம் வங்கியில் வாங்கிய
கடனை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை என்னிடம்
இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.அதுவரை நான்
வேலையில் இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள்.” என
சொல்லிவிட்டேன் சார்.

எனது தந்தையும், “அதுதான் சரி. வங்கி, நாம் கேட்டபோது
உடனே கடன் கொடுத்து உதவியது போல, நாமும் நம்மிடம்
பணம் இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பிக்
கட்டுவதுதான் சரி.” என சொல்லிவிட்டார். என்றார்.

உங்களைப்போல் கடன் பெற்ற பயனாளிகள் எல்லோரும்
நினைத்தால் என்னைப்போல் உள்ள வங்கி மேலாளர்களுக்கு
வாராக்கடன்கள் பற்றிய கவலையே இருக்காது. என்றேன்.

மூன்று வருடங்களில் அந்த கடனை முடிக்க மாதம் எவ்வளவு கட்டவேண்டும் எனக் கணக்கிட்டு வைத்திருந்ததை அவரிடம்
கொடுத்தேன். பின்பு அவர் நன்றி சொல்லி விடைபெற்று
சென்ற பின் சில மணி நேரம் அவரைப் பற்றியே
நினைத்துக்கொண்டு இருந்தேன்.

அந்த இளம் வயதில் வாங்கிய கடனை உடனே
அடைக்கவேண்டும் என்று நினைக்கத் தூண்டியது எது?
கேட்டவுடன் கடன் தந்து உதவிய எங்கள் வங்கியின் செயலா?
அல்லது அவர் இளமையில் கஷ்டப்பட்டு வளர்ந்த
குடும்ப சூழ்நிலை கற்றுத்தந்த பண்பா? என யோசித்தபோது
இரண்டாவது தான் சரியான காரணமாக இருக்கமுடியும்
எனத் தோன்றியது.

அவரது குடும்பத்தில் வறுமை இருந்திருக்கலாம் ஆனால்
அவரது நல்ல எண்ணத்தில் வறுமை இல்லை
என்பது தான் எனது கருத்து.    


தொடரும்

செவ்வாய், 20 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 16



ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, அந்த பொறியாளர் (கல்விக்கடன் பெற்ற
பயனாளி) ஒரு வாரத்திற்குள் ஒரு கேட்புக் காசோலையையும்
(Demand Draft) அத்துடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார்
என்றும் அவரது கடிதத்தைப் படித்ததும் எனக்கு ஆச்சரியம்
ஏற்பட்டது என்றும் சொல்லியிருந்தேன் அல்லவா. அதற்கு
காரணம் உண்டு.

பொதுவாக வங்கிகளில் கடன் பெற்றவர்கள் (நான் இங்கே
குறிப்பிடுவது எல்லோரையும் அல்ல) வங்கிக் கடனை ஒழுங்காக
குறிப்பிட்ட காலத்தில் திருப்பிக் கட்டுவதில்லை. மற்றவைகளுக்கு
கொடுக்கும் முன்னுரிமையை வங்கிக் கடனுக்குத் தருவதில்லை
என்பது மறுக்கமுடியாத, வருத்தப்படக்கூடிய உண்மை.  

வங்கியின் வட்டி விகிதம் குறைவு என்பதாலும், தவணைதவறிய கடன்களுக்கு வங்கிகள் அபராத வட்டி விதித்தாலும் அது வெளியே
வாங்கும் கடனுக்கான வட்டியைவிட குறைவு என்பதாலும்  
மெதுவாக சௌகரியப்படும்போது(!) கட்டிவிடலாம்  என
இருந்து விடுவதே அவ்வாறு செய்வதன் காரணம்
என நினைக்கிறேன்.  

மேலும் குறித்த நேரத்தில் கடனை திருப்பி செலுத்தாவிட்டால்,
தனியார் போல, வங்கியில் உடனே மேல் நடவடிக்கை
எடுக்கமாட்டார்கள், அப்படி எடுத்தாலும் அது நீதி மன்றம்
மூலம் தான் எடுப்பார்கள் என்பதால், அப்போது பார்த்துக்
கொள்ளலாம் என கடன் பெற்றோரில் சிலர் இருந்து விடுவதும்
வழக்கம்.

ஆனால் இந்த பயனாளியோ வழக்கத்துக்கு மாறாக நான்
தெரிவித்திருந்த தொகையை விட மும்மடங்கு தொகையை அனுப்பியிருந்தார்.

மேலும் அவரது கடிதத்தில் அந்த கடனை மூன்று
ஆண்டுகளுக்குள் அடைக்கவேண்டுமானால்,மாதம் எவ்வளவு கட்டவேண்டியிருக்கும் என்று கணக்கிட்டு வைக்குமாறும்,
ஒரு வாரத்தில் ஊருக்கு வரும்போது நேரில் வந்து அதை
தெரிந்துகொண்டு போவதாகவும் எழுதியிருந்தார்.

கடனை 72 மாதத்தவணையில் திருப்பி செலுத்தலாம் எனத்
தெரிவித்து இருந்தும், அவர் அதை 36 மாதங்களில் திருப்பிக்கட்ட
விரும்புவதாக எழுதியிருந்தைப் படித்ததும் எப்படி
ஆச்சரியம் வராமல் இருக்கும்?  

புதிதாய் வேலைக்கு சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர்ந்தவுடன்
முதல் சம்பளத்தில் பெற்றோருக்கு கொடுத்தது போக
(அநேகம் பேர் அவ்வாறுதான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.)
மீதியை தங்களுக்குத் தேவையானவைகளை வாங்க செலவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சம்பளத்தின் பெரும்பகுதியை முதலில்
வங்கிக்கு செலுத்த நினைத்தது அவர் தான் என எண்ணுகிறேன்.
அதனால்  எனக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை ஏற்பட்டது
உண்மை.

அவர் கேட்டிருந்தது போல், மூன்று வருடங்களில் அந்த கடனை
முடிக்க மாதம் எவ்வளவு கட்டவேண்டும் எனக் கணக்கிட்டு
வைத்துவிட்டு, ஏன் அவ்வாறு விரைவாக கடனை முடிக்க
விரும்புகிறார் என அறிய அவரது வருகைக்கு காத்திருந்தேன்.

சொன்னதுபோல், மறுவாரம் அவர் கிளைக்கு வந்தார். அவரது
கடிதமும் கேட்புக் காசோலையும் கிடைத்ததை சொல்லி அவர்
முதல் சம்பளத்திலேயே கடனை அடைக்கத் தொடங்கியதை
பாராட்டினேன்.

பின்பு வங்கியின் விதிப்படி கல்விக்கடனை 72 மாதத் தவணையில்
திருப்பி செலுத்தலாம் என்று உள்ளபோது ஏன் 36  மாதங்களில்
அடைக்க விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டபோது அவர் சொன்ன
பதில் நான் எதிர்பாராத ஒன்று.

தொடரும்

வியாழன், 15 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 15



வயது ஏற ஏற ஏற்படும் அனுபவம் கற்றுத்தரும் பாடத்தால்தான்  
பொறுப்பு வரும்,அறிவு முதிர்ச்சி (Maturity of mind) அடையும்
என்பது எல்லோரும் சொல்வதும், நினைத்துக்கொண்டு 
இருப்பதும்.

ஆனால் வயதுக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை
என்பதை அறியும் வாய்ப்பை கல்விக் கடன் பெற்ற இரு 
இளம் வாடிக்கையாளர்கள் எனக்கு உணர்த்தினார்கள்.

ஒரு நாள் வங்கியில் என்னைப் பார்க்க ஒருவர் அவரது
மகனுடன் வந்தார். அவரது மகன் பொறியியல் கல்லூரியில்
இரண்டாம் ஆண்டு படிப்பதாகவும் முதல் ஆண்டுக்கான
கல்லூரிக் கட்டணத்தை வெளியில் அதிக வட்டியில் கடன்
வாங்கி செலுத்தியதாகவும், வட்டி அதிகமாக இருப்பதால்,
வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் மற்ற
மூன்று ஆண்டுகால கட்டணத்தை கட்டலாம் என்பதால்
அது கிடைக்குமா என கேட்டுத்தெரிந்து கொள்ள
வந்திருப்பதாக சொன்னார்.

அவரையும் அவரது மகனையும் உட்கார சொல்லிவிட்டு
அவரைப்பற்றி விசாரித்தேன்.அவர் அருகில் உள்ள ஒரு
கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூலி வேலை செய்வதாகவும் சொன்னார்.அவரது மகன் நன்றாகப் படித்து பள்ளி 
இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் 
பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து படிப்பதாகவும் 
சொன்னார்.

நான் அந்த மாணவன் வைத்திருந்த சான்றிதழ்களைப் 
பார்த்தபோது,பள்ளி இறுதித்தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்களும்,பொறியியல் கல்லூரியில் முதலாம் 
ஆண்டுத்தேர்வில் 80 விழுக்காடுமதிப்பெண்களும் 
பெற்றிருப்பது தெரியவந்தது.

நான் அவரிடம் ஏன் சென்ற ஆண்டே வங்கிக்கு 
வரவில்லை?’ எனக் கேட்டதற்கு, வங்கியில் கடன் 
தருவார்கள் என்று தனக்குத்தெரியாது என்றும் இப்போது 
அவருக்குத் தெரிந்த ஒருவர் வங்கியில் கல்விக்கடன் 
தருகிறார்கள் என  சொன்னதால் வந்ததாகவும் சொன்னார்.

அவரிடம் நான் அவசியம் உங்கள் மகன் படிக்க கடன் 
தருகிறேன். அது மட்டுமல்ல சென்ற ஆண்டு கட்டிய கல்வி
மற்றும் விடுதிகட்டணத்தின் இரசீதுகளைத் தந்தால் அதற்குரிய பணத்தையும் தருவோம். என்றேன்.(அவ்வாறு தரலாம் என்ற 
விதி இருந்ததால்நான் அப்படி சொன்னேன்.) அவருக்கு 
சொல்லமுடியாத சந்தோஷம்.

பின் ஓரிரு நாட்களில் தேவையான ஆவணங்களை கொடுத்து
அந்த மாணவர்  கடன் பெற்று சென்றார். அதற்குப் பிறகு
ஒவ்வொரு வருடமும் அவர் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்
பட்டியலைக் கொடுத்து அந்தந்த ஆண்டுகளுக்கான தவணைத்
தொகைக்கான காசோலையைப் பெற்று சென்றார். ஒவ்வொரு
ஆண்டும் 80 விழுக்காடுக்கு மேலேயே மதிப்பெண்கள்
பெற்றிருந்தார்.

படிப்பு முடிந்த மூன்று மாதங்களிலேயே அவருக்கு  
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி  ஆராய்ச்சி 
நிலையத்தில் பணி கிடைத்துவிட்டது. அந்த மகிழ்ச்சியான 
செய்தியை என்னிடம் வந்து சொன்னபோது அவரை மனதார 
வாழ்த்தி அனுப்பினேன்.

பின்னர் ஒரு மாதம் கழித்து அவர், தான் தவணைத் 
தொகையாக மாதம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு 
கடிதம் எழுதியிருந்தார்.

அவர் பெற்றிருந்த கடன் தொகையோடு அதுவரை 
உள்ள வட்டியையும் சேர்த்து வந்த தொகையை அவருக்குத் 
தெரிவித்து, அந்த தொகையை 72 மாதத் தவணையில் 
கட்டலாம் என  தெரிவித்தேன்.

ஒரு வாரத்திற்குள் அவர் கடிதத்தோடு ஒரு கேட்புக் 
காசோலையையும் (Demand Draft) அனுப்பியிருந்தார்.  
வரது கடிதத்தைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.  





தொடரும்