சனி, 3 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 5

ஸ்டேஷனுக்கு சென்று Left Luggage அறையில்
இருந்த எனது ‘ஹோல்டாலை’எடுத்துக்கொண்டு
தில்லி செல்லும் மெயில் வண்டி நிற்கும்
பிளாட்ஃபாரத்திற்கு என் நண்பரின்
அண்ணனுடன் சென்றேன்.

இரண்டாம் வகுப்பு பெட்டியை அடைந்தபோது
அது ஒரு முன் பதிவு செய்யப்படாத பெட்டி
போன்று தோன்றியது.முன்பதிவு செய்தவர்கள்
மேலே ஏறி படுத்திருக்க,அநேகம் பேர்
(மூன்றாம் வகுப்பு பயணச் சீட்டுடன்)
இருக்கையில் நெருக்கி அடித்துக்கொண்டு
உட்கார்ந்து கொண்டும், நின்றுகொண்டும்
இருந்தனர்.

அதைப் பார்த்ததும் என் நண்பரின் அண்ணன்,
நீங்கள் இங்கேயே இருங்கள் நான் T.T.E
பார்த்து ஏதாவது செய்யமுடியுமா என்று
பார்க்கிறேன் என்று கூறி சென்றார்.நானும்
ஆவலுடன் நின்றிருந்தேன்.

அவர் திரும்பி வந்து இன்று சனிக்கிழமை
ஆதலால் வண்டியில் கூட்டம் அதிகம்.T.T.E
இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
பரவாயில்லை இதிலேயே ஏற்றி விடுகிறேன்
எனச்சொல்லி,எனது ஹோல்டாலை எடுத்து
கதவைத்திறந்து வைத்தார்.

உள்ளே நிற்கவே இடம் இல்லாதததால்,இரண்டு
கதவுகளுக்கு இடையே உள்ள இடத்தில் (Toilet)
அருகே வைத்தார்.என்னிடம்‘உங்கள் ஹோல்டால்
மேல் உட்கார்ந்துகொள்ளுங்கள்.கூட்டம்
குறையும்போது உள்ளே சென்றுவிடலாம்.’
எனக்கூறிவிட்டு இறங்கிவிட்டார்.

வண்டி கிளம்பியதும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு
எனது இருக்கையில்(?) அமர்ந்தேன்.சிறிது நேரத்தில்
உள்ளே இருந்தவர்கள் சிலர் நிற்க இடம்
இல்லாததால் நான் இருந்த இடத்திற்கு அருகே
வந்து நின்றுகொண்டனர். அப்படி இப்படி நகரக்கூட
முடியவில்லை.மூச்சு மூட்டுவதுபோல் இருந்தது

நானும், இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு இருந்தும்,
இப்படி Toilet அருகே உட்கார்ந்து பயணிக்கவேண்டி
இருக்கிறதே என் தலை விதியை நொந்து கொண்டு
இருந்தேன். ஏன் இந்த பயிற்சிக்கு செல்ல
சம்மதித்தோம் என்று கூட நினைத்தேன்.

பயணத்தின் ஊடே அந்த ‘Toilet’ க்கு வரும்
பயணிகளுக்காக நான் எழுந்து,எழுந்து நின்று
அமர வேண்டியிருந்தது. அதைவிடக் கொடுமை
அவர்கள் உள்ளே போய் வரும்போது, வேறு
வழியில்லாமல் எனது ஹோல்டாலின் மேல்
காலை வைத்து சென்றதுதான். அவர்கள் சென்ற
பிறகு அதன் மேலேயே உட்காரவேண்டிய நிலை.

மாமன்னன் ஷாஜகான், காஷ்மீரைப்பற்றி
சொல்லும்போது, ‘இவ்வுலகில் சொர்க்கம் என்று
ஒன்று இருந்தால் அது இங்கேதான்! அது இங்கேதான்!
அது இங்கேதான்!
என்று சொன்னதாக சொல்வார்கள்.
(If ever there is Paradise on Earth. It is here!
It is here! It is here! )


என்னைக் கேட்டால் ‘நரகம்’ என்று ஒன்று இருந்தால்
அது அன்று நான் பயணம் செய்த இடம்தான்’ என்று
அடித்துச் சொல்வேன்.

இரவு சுமார் 2 மணி இருக்கும். வண்டி ஏதோ ஒரு
ஸ்டேஷனில் நின்றது. சன்னல் வழியே பார்த்தபோது
அது ‘சூரத்’ எனத் தெரிந்தது. அங்கே நிறைய கூட்டம்
இரயில் ஏறக் காத்திருந்தது.

நான் இருந்த பெட்டி அருகே வந்த ஒரு கும்பல்
‘கோலோ. கோலோ.’ என சப்தமிட்டு கதவைத்
தட்டினார்கள். கதவருக்கே நின்ற ஒருவர்
இரக்கப்பட்டு கதவைத் திறந்ததும், இரண்டு மூன்று
பேர் என்னையும் மற்றவர்களையும்
மிதித்துக்கொண்டு உள்ளே ஏறினார்கள்.

என்னால் உட்காரவும் முடியவில்லை. நிற்கவும்
முடியவில்லை.மொழி தெரியாததால் பேசவும்
முடியவில்லை.நல்ல வேளையாக அவர்கள்
உள்ளே சென்றுவிட்டனர். இரவு முழுதும்
உட்கார்ந்துகொண்டே தூங்காமல் தூங்கினேன்.

காலையில் எழுந்து மற்றவர் வருமுன் பல் விளக்கி
விட்டு காலை காஃபிக்காக காத்திருந்தேன்.
வட மாநிலங்களில் தேனீர்தான் கிடைக்கும்
என்றாலும் காஃபி வருமா என்ற நைப்பாசைதான்.
ஆனால் எதுவும் வரவில்லை.

(இந்த நேரத்தில் நான் படித்த ஒரு செய்தி நினைவுக்கு
வருகிறது. தென்னகத்திலிருந்து ஒரு மாணவன்
IAS நேர்முகத்தேர்வுக்கு சென்றாராம். அந்த தேர்வில்
‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ எனக் கேட்டபோது,
அவர்,’நான் தென்னாட்டிலிருந்து வருகிறேன்.’
என்றாராம். அதற்கு தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர்,
நீங்கள் இரயிலில் தானே வந்தீர்கள். எந்த இடத்தில்
தென்னாடு முடிந்து வடநாடு ஆரம்பிக்கிறது?’ எனக்
கேட்டதற்கு அந்த மாணவன் சொன்னாராம்,’எப்போது
நான் காஃபி கேட்டதற்கு ,டீ கிடைத்ததோ அங்கேதான்
வடநாடு ஆரம்பிக்கிறது.’ என்றாராம். இது உண்மையா
அல்லது இட்டுக் கட்டியதா எனத்தெரியவில்லை.)

காலை சுமார் 9 மணிக்கு இரயில் ரட்லம் சந்திப்பை
(மத்ய பிரதேசம்) அடைந்தபோது வெளியே எட்டிப்
பார்த்தேன். என் பெட்டிக்கு அருகே ஒருவர் பூடி பூடி
எனக் கூவிக்கொண்டு, நம் ஊரில் ‘சோன் பப்டி’
விற்பவர்கள் கொண்டுவரும் பெரிய ‘மோடா’ போன்ற
ஒன்றின் மீது பூடிகளை(நாம் பூரி என்று சொல்கிறோமே
அதேதான்) வைத்து, அவைகளை தராசில் நிறுத்து
விற்றுக்கொண்டு இருந்தது எனக்கு வியப்பாய்
இருந்தது.

அருகில் சென்ற போது அவர் என்ன கேட்டார் எனத்
தெரியவில்லை.‘வேண்டுமா?’ எனக் கேட்கிறார் எனப்
புரிந்துகொண்டு தலையை ஆட்டினேன்.

உடனே அவர் தராசில் சில பூரிகளை வைத்து நிறுத்துக்
கொடுத்தார். அருகில் இருந்த ஒருவர் உதவியுடன் அவர்
கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அங்கேயே நின்று
சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணீர்
குடித்துவிட்டு பெட்டிக்கு வந்துவிட்டேன்.
(அப்போதெல்லாம் தண்ணீர் விற்கப்படவில்லை.)

திரும்பவும் நரக வேதனைதான். மதிய உணவு
எதுவும் கிடைக்கவில்லை. மாலை சுமார் 5 மணிக்கு
சவாய் மதாபூர் (ராஜஸ்தான்) என்ற ஊரை
அடைந்தபோது, உள்ளே இருக்கையிலிருந்து
கதவருகே வந்த ஒருவர் என்னைப் பார்த்து,
இந்தியில் ஏதோ சொன்னார். நான் ‘மலங்க மலங்க’
விழித்ததைக் கண்டு ஆங்கிலத்தில், ‘உள்ளே இடம்
இருக்கிறதே நீங்கள் வந்து உட்காரலாமே?’ என்றார்.
அப்பாடா என எழுந்து உள்ளே போய் இடமிருந்த
ஒரு இருக்கைக்கு கீழே எனது ஹோல்டாலை
வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.

எனக்கு அருகில் இருந்த ஒருவர் அவருடன் வந்த
ஒரு சிறுமியுடன் தமிழில் பேசியதைக்கேட்டதும்
பாலை வனத்தில் சோலையைப் பார்த்தது போன்ற
மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் ‘இரவு சாப்பாடு
எங்கு கிடைக்கும்’ என்றேன்.

அவர்’ கவலை வேண்டாம். நான் வாங்கும்போது
உங்களுக்கும் வாங்கித்தருகிறேன்.’என்றார். இரவு
சுமார் 9 மணிக்கு ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி
நின்றபோது அவர் இறங்கிப்போய் எனக்கும் சப்பாத்தி
வாங்கித் தந்தார். அதைச் சாப்பிட்டுவிட்டு இடம்
கிடைத்த நிமம்தியில் அப்படியே உறங்கிவிட்டேன்.

காலையில் கண் விழித்து இறங்கத்தயாரானேன்.
16/10/1967 திங்கள் அன்று சுமார் 6 மணிக்கு இரயில்
புது தில்லி இரயில் நிலையத்தை அடைந்தது.

தொடரும்

6 கருத்துகள்:

  1. அன்றும் இன்றும் என்றுமே தமிழ் நாட்டில் தான் கட்டுபாடுகள் அதிகம் ... மிகவும் பவ்யமாக " reservation " பெட்டியா என்று கேட்டு விட்டு முன் பதிவு செய்யாதவர்கள் நகர்ந்து விடுவதை இன்றும் காணலாம் . ஆனால் பல வட மாநிலங்களில் நிலமையோ மிக மிக மோசம் இன்றும் . பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்கள் தான் அதிகம் . பல வருடங்கள் முன்பு Indian Express செய்தி தாளில் வந்த ஒரு செய்தி ..பீகார் மாநிலத்தில் யாரும் பயண சீட்டினை வாங்குவதில்லை என்ற செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என்று கண்டு அறிய விரும்பியது அந்த செய்தி தாள் . தனது நிருபர் ஒருவரை அனுப்பி செய்தியை சேகரிக்க செய்தது .. அவர் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரத்தின் ரயில் நிலையம் சென்று அங்கு பயண சீட்டு விற்கும் பகுதிக்கு சென்றார் ..அவர் கண்ட காட்சி. அங்கு பயண சீட்டு வாங்குவதற்கு யாருமே இல்லை ..தூங்கி கொண்டு இருந்த பணியாளரை எழுப்பி தனக்கு ஒரு பயண சீட்டினை கேட்டார் .. பணி புரிபவர் மயங்கி விழா குறை தான் . அவர் கூறியது ...இங்கு நான் டிக்கெட் விற்றே பல மாதங்கள் ஆகி விட்டன ...என் பணியே எனக்கு மறந்து விட்டது ! அனால் எல்லா ரயிலிலும் கூட்டம் ..!
    நிற்க ,மிகவும் கஷ்டமான பயணத்தை கூட நகைச்சுவையுடன் விவரித்த விதம் பேஷ் பேஷ் ..குறிப்பாக ..சொர்க்கம் நரகம் !
    தலை நகர் வந்தவுடன் அப்பாடா என்று இருந்து இருக்குமே .....
    இனி தொடரட்டும் நற் பயணம் ....வாசு

    பதிலளிநீக்கு
  2. வடமாநிலங்களில் ரயில் பயணங்கள் இப்படித்தான் என்று கேள்விப்பட்டிருந்தேன். இப்போது உங்கள் அனுபவம் உறுதி செய்கிறது. மொழி தெரியாத இடத்தில் தமிழ் பேசுபவர் தேவதை மாதிரி தெரிந்திருப்பார் இல்லை..? தொடருங்கள். காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. அருமையானதொரு பயணக்கட்டுரை. தில்லியை அடைந்தபின் என்ன நடந்தது என்றறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! இப்போது தமிழ் நாட்டிலும் இந்த வியாதி தொற்றிக் கொண்டுள்ளது. Mangalore Mail போன்ற இரயில்களில் முன் பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டிகளில் ஜோலார்பேட்டை வரை எல்லோரும் ஏறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! நீங்கள் கூறியது சரிதான்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு