வெள்ளி, 11 நவம்பர், 2011

நினைவோட்டம் 57

பள்ளி இறுதித்தேர்வு எழுது முன் கிடைத்த
விடுமுறை நாட்களில்,நான் வீட்டில் இருந்து
படிக்க ஆரம்பித்தேன்.நாங்கள் குடியிருந்த
வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் இரவில்
இலாந்தர் விளக்கில் தான் படித்தேன்.

9 ஆம் வகுப்பு படிக்கும்போதும்,10 ஆம் வகுப்பு
படிக்கும்போதும் வெவ்வேறு வீடுகளில் வாடகைக்கு
இருந்தாலும்,அங்கெல்லாம் மின் இணைப்பு இருந்தது.
S.S.L.C படித்த வருடம் அச்சுதம்மன் கோவில்
வீதியில் உள்ள வீட்டிற்கு மாறி வந்தபோது, அங்கு
மின் இணைப்பு இல்லை.

நாங்கள் குடி இருந்த தெருவில் இருந்த
வீடுகளுக்கெல்லாம் மின் இணைப்பு இருந்தபோது,
எங்கள் வீட்டுக்கு இல்லாதிருந்ததன் காரணம்
அந்த வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பு
ஏனோ பெறாததால் தான்.

மின் விளக்கு இல்லாதது எனக்கு அசௌகரியமாகத்
தெரியவில்லை.எனது ஊருக்கே 1963 ஆம்
ஆண்டுதான் மின் வசதியே வந்தது.ஊருக்கு
செல்லும்போது இலாந்தர் விளக்கிலும்,சிம்னி விளக்கு
என சொல்லப்பட்ட, காடா விளக்கிலும் படித்த
அனுபவம் இருந்ததால், இலாந்தர் விளக்கில்
படிப்பது ஒன்றும் கடினமாக இல்லை.

ஒரே பாடத்தை நாள் முழுதும் படித்தால்
அலுப்பாய் இருக்கும் என்பதால் ஒவ்வொரு
பாடத்தையும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு
மணி நேரம் படிக்க வேண்டும் என ஒரு
அட்டவணை போட்டு தேர்வுக்கு படித்தேன்.
அந்த வழியையே பின்பு வங்கியில் சேர்ந்த
பிறகு C.A.I.I.B தேர்வுக்கு படிக்கும்போதும்
பின் பற்றினேன்.

பள்ளி இறுதிதேர்வில் கணிதம் மற்றும் அறிவியல்
பாடங்களைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு
மற்றும் பள்ளி இறுதி ஆண்டு வகுப்பில்
நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள்
கேட்பார்கள்.

சமூகவியல் (Social Studies) பாடத்தைப்
பொறுத்தவரை 9, 10 மற்றும் பள்ளி இறுதிஆண்டு
வரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள்
கேட்பார்கள்.

எனவே தேர்வுக்கு முன்பு, நடப்பு ஆண்டில்
நடத்தப்பட்ட பாடங்கள் மட்டுமல்லாமல்
முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட
பாடங்களையும் திரும்பவும் படித்து நினைவில்
இருத்திக்கொள்ளவேண்டியது அவசியம்
என்பதால் அட்டவணை போட்டு
திட்டமிட்டு படித்தேன்.

விடியற்காலை எழுந்து படிக்கும் வழக்கம்
எனக்கு இல்லாததால் இரவு பத்து மணி
வரை படித்திருக்கிறேன்.

இரவில் நான் இலாந்தர் முன் அமர்ந்து
படித்துக்கொண்டு இருக்கும்போது என் அண்ணன்
சில நாட்களில் நான் படிக்கிறேனா அல்லது
உட்கார்ந்து கொண்டே தூங்குகிறேனா என
பார்ப்பதற்காக சப்தம் போடாமல் பின்னால்
வந்து நின்றிருக்கிறார்.

நான் தூங்காமல் படித்துக்கொண்டு இருந்ததால்
அவர் வந்து நிற்பது எனக்கு தெரிந்தும்,அதை
தெரிந்தது போல் நான் காட்டிக்கொண்டது
இல்லை.

நாங்கள் தேர்வு எழுதிய கால கட்டத்தில்
ஒவ்வொரு நாளும் காலையில் மற்றும்
பிற்பகலில் தேர்வுகள் நடக்கும். அதாவது
ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்.



நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. என்ன ஒற்ருமை சார்?!நீங்கள் தெரு மாற்றினீர்கள்.நான் ஊர் மாற்றினேன். பத்து வரை கோவில்பட்டியில் படித்த போது வீட்டில் மின்சாரம் இருந்தது. பின் SSLC சிவகாசியில் படிக்கும் போது அங்கு மீட்டில் மின்சாரம் இல்லை. அரிக்கேன் விளக்கு ஒளியில்தான் படித்தேன்!இருவரும் சிறப்பாகவே தேறினோம்!
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! ஒத்த கருத்து உடையவர்களுக்கு ஒரே ‘எண்ண அலை’ இருக்கும் என்பார்கள். நாம் இருவருக்கும் ஒரே ‘எண்ண அலை’ இருக்கப்போகிறது என்பதற்கு இது முன்னோடியோ என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு