புதன், 30 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 4

Churchgate ஸ்டேஷனை அடைந்ததும் இறங்கி
விசாரித்தபோது, முதல் வகுப்பு முன்பதிவுக்கு,
அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள கட்டிடத்தில்
இயங்கும் அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும்
என்றார்கள்.

அந்த இடம் மிக அருகில் இருந்ததால் நடந்தே
அங்கு சென்றேன்.அங்கு சென்று பார்த்தால் அதிக
கூட்டம். முன்பதிவு செய்ய நிறைய பேர்
காத்திருந்தார்கள். அங்கு நின்றால் நேரமாகும்
என்பதால் விசாரணை என எழுதப்பட்டிருந்த Counter
அருகே சென்று அன்று இரவு தில்லி செல்லும்
மெயில் வண்டியில் முதல் வகுப்புக்கு இடம்
கிடைக்குமா என்று கேட்டேன்.

அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்,என்னை
வினோதமாகப் பார்த்து ‘இன்று இரவு பயணிக்க
முன்பதிவா? இதோ இங்கு இருப்பவர்கள், பல
நாட்களுக்குப் பிறகு பயணிக்க இன்று வந்து
‘கியூ’ வில் நிற்கிறார்கள். நீங்கள் வந்து இன்றைக்கு
வேண்டும் என்று கேட்கிறேர்களே.அதற்கு
வாய்ப்பே இல்லை.’ என சொல்லிவிட்டு தன்
பணியில் மூழ்கிவிட்டார்.

நல்ல வேளை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதற்கு
அவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார்.

இனி என்ன செய்வது என யோசித்துக்கொண்டே
திரும்பவும் Churchgate ஸ்டேஷன் வந்தபோது,பயங்கரத்
தலைவலி. அப்போதுதான் நினைவுக்கு வந்தது
நான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று.

‘மெய்வருத்தம்பாரார்
பசிநோக்கார் கண்துஞ்சார்
---------------------------
கருமமே கண்ணாயினார் ‘


என்று குமரகுருபரர் பாடியதுபோல்,முன்பதிவு
பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததால்
பசியே தெரியவில்லை.

மேலும் காலையில் முன்பதிவு இல்லாமல் வண்டியில்
பயணித்ததால் கூட்ட நெருக்கடியில் சாப்பிடுவது
பற்றி நினைப்பே வரவில்லை.

காலியாக இருந்த வயிறு,தலைவலி மூலம் எச்சரிக்கை
மணி அடித்ததால் இனி அதை தவிர்க்க முடியாது என்ற
நிலைக்கு வந்ததும்,ஸ்டேஷனில் இருந்த சிற்றுண்டி
விடுதியில் பிரட்&ஜாம் தேநீர் சாப்பிட்டு ஒருவாறு
பசி ஆறினேன்.

இனி நண்பர் அரங்கநாதனின் அண்ணனைப் பார்த்து,
அவரின் உதவியைத்தான் நாடவேண்டும் என முடிவு
செய்து (வேறு வழியும் இல்லை என்பது வேறு விஷயம்)
Central க்கு பயணச்சீட்டு வாங்கி கிளம்பத்தயாராக இருந்த
ஒரு மின் தொடர் வண்டியில் ஏறினேன்.

எங்கே Central ஸ்டேஷன் ஐ தவறவிட்டுவிடுவோமோ
என்ற தவிப்பில் வாயில் அருகே கைப்பிடியைப்
பிடித்துக்கொண்டு நின்றிருந்தேன்.

Central ஸ்டேஷன் பலகையைப் பார்த்ததும், அவசரம்
அவசரமாக இறங்க யத்தனித்தபோது என் அருகே
நின்றிருந்த ஒருவர் கையைப் பிடித்து நிறுத்தி கேட்டார்
‘என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று.

‘நான் இறங்கப் போகிறேன்’ என்றதும்,அவர் ‘இந்த
வண்டி இங்கு நிற்காது. நீங்கள் ஊருக்கு புதியவரா?’
என்றார்.

‘ஆம்’ என்றதும், ‘பம்பாயில் சில மின் வண்டிகள்
எல்லா நிலையத்திலும் நிற்காது. நீங்கள் வண்டியில்
ஏறுமுன் பிளாட்ஃபாரத்தில் உள்ள தகவல் பலகையைப்
பார்த்து இருக்கலாமே?’என்றார்.

இப்போது என்ன செய்யப்போகிறோம் என்று
தவித்தபோது அவர் சொன்னார்.’கவலை வேண்டாம்.
இது அடுத்து ‘மகாலக்ஷ்மி’ என்ற ஸ்டேஷனில்
நிற்கும்.அங்கு இறங்கி திரும்ப Central ஸ்டேஷன்
நிற்கும் வண்டியாகப் பார்த்து ஏறி வந்துவிடுங்கள்.’
என்றார்.

இது ஏதடா புதிய தலைவலியாக உள்ளதே என
நினைத்து வேறு வழியின்றி மகாலக்ஷ்மி ஸ்டேஷன்
எப்போது வரும் எனக்காத்திருந்தேன். அந்த ஸ்டேஷன்
வந்தபோது,அவர் சொன்னார் ‘இங்கு நீங்கள்
இறக்கிக்கொள்ளலாம்’என்று.அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்.

இப்போது எனக்குள் ஒரு போராட்டம். வெளியே சென்று
திரும்பவும் Central க்கு பயணச்சீட்டு எடுப்பதா,
வேண்டாமா என்று? ஒருவேளை வெளியே பயணச்சீட்டு
வாங்க செல்லும்போது, பயணச்சீட்டு பரிசோதகர் திடீரென
பயணச்சீட்டை காண்பிக்கசொல்லி, சென்ட்ரலில் இருந்து
பயணச்சீட்டு வாங்காமல் வந்து ஏமாற்றியதாக எடுத்துக்
கொண்டால் என் செய்வது என்ற கவலைதான். சரி
வெளியே செல்லவேண்டாம். வந்தது வரட்டும் எனத்
துணிந்து திரும்பவும் வரும் இரயிலில் சென்ட்ரல்
செல்வோம். அப்படி யாரேனும் கேட்டால் உண்மை
நிலையை சொல்வோம் என்றெண்ணி பிளாட்ஃபாரத்தில்
காத்திருந்தேன்.

அடுத்து வந்த இரயிலில்,சென்ட்ரலில் நிற்குமா எனக்
கேட்டுக்கொண்டு ஏறினேன். சென்ட்ரல் வரும் வரை
இதயம் பட பட என அடித்துக்கொண்டது நிஜம்.

நல்ல வேளையாக அந்த கூட்டத்தில் பயணச்சீட்டு
பரிசோதகர் யாரும் வரவில்லை. சென்ட்ரல் ஸ்டேஷன்
வந்ததும் உடனே இறங்கி வெளியே வந்துவிட்டேன்.
என் வாழ்வில் பயணச்சீட்டு இல்லாமல்,பம்பாய்
சென்ட்ரல் முதல் மகாலக்ஷ்மி ஸ்டேஷன் வரை
சென்று பயணித்தது அதுவே முதலும் கடைசியும்.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து நேரே நண்பர்
அரங்கநாதன் அண்ணனின் வீட்டிற்கு சென்றேன். என்
அதிர்ஷ்டம் அவர் அலுவலகத்திலிருந்து
திரும்பியிருந்தார். நண்பரின் இன்னொரு அண்ணியும்
அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தார்.

அவரிடம் அவரது துணைவியார் நான் வந்து சென்றது
பற்றி கூறியிருக்கவேண்டும். நான் என்னைப்பற்றி
அறிமுகம் செய்தபோது,அவர் ‘இன்னும் அரங்கநாதனின்
கடிதம் வரவில்லை. அதனாலேன்ன.பரவாயில்லை.’
என்றார்.

பிறகு அவரிடம் எனது Churchgate முயற்சி பற்றி
சொன்னதற்கு, நீங்கள் அங்கு போயிருக்கத்
தேவையில்லை. பயணம் செய்யும் நாளில் நிச்சயம்
இடம் கிடைக்காது. பரவாயில்லை. இன்று இரவு நாம்
முன்பே ஸ்டேஷன் சென்று இரண்டாம் வகுப்பு
பெட்டியில் இடம் பிடிக்கலாம்’ என்றார்.

அதற்குள் அவரது துணைவியார் வந்து காஃபி
கொடுத்துவிட்டு, ‘தவறாக எண்ணவேண்டாம். இங்கு
நிறைய பேர் பொய் சொல்லி உள்ளே வந்து
திருடிப்போவதுண்டு. அதனால்தான் இவர் வரட்டும்
என்றேன். தவறாக எண்ணவேண்டாம்.’ என்றார்.

நான்'பரவாயில்லைங்க.எனக்கு இப்போது ஒரே
கவலை. எப்படி பயணம் செய்யப்போகிறேன்
என்பதுதான்.’என்றேன். பின்பு நண்பரின் அண்ணன்
என்னை ‘வெளியே போய்வரலாம் வாருங்கள்.’என்று
கூறி என்னை Marine Drive அழைத்து சென்றார்.

எனக்கு அங்கு எதிலும் நாட்டமில்லை. எப்போது
திரும்புவோம் என கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டு
இருந்தேன். மாலை 7 மணி வரை இருந்து விட்டு
வீடு திரும்பினோம்.

மதியம் நான் சரியாக சாப்பிடவில்லை என அறிந்த
அவர்கள் வீட்டில் எனக்கு நல்ல இரவு விருந்து
கொடுத்தனர். இரவு 8 மணிக்கு அந்த குடியிருப்புக்கு
எதிரே இருந்த ஸ்டேஷனுக்குகிளம்பியபோது,
என்னுடன் நண்பரின் அண்ணனும் வந்தார். வீட்டில்
உள்ளோருக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.



தொடரும்

6 கருத்துகள்:

  1. ஒவ்வொரு சிறு நிகழ்வையும் நினைவு கூர்ந்து மிக அருமையாகக் கொண்டு செல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு பயண சீட்டிற்காக பட்ட வேதனைகள் படிக்கும் போது தற்போது நம் நாடு எவ்வளவு முன்னேறி உள்ளது என்பதை எண்ணுங்கால் வியப்பாக உள்ளது . வீட்டில் அமர்ந்த வண்ணம் கணினி மூலம் முன் பதிவு செய்யும் வசதி என்ன ; கை பேசி மூலம் பேசும் வசதி என்ன ..அந்த களத்தில் அந்த காலத்தில் கை பேசி வசதி இருந்து இருந்தால் தங்கள் நண்பர் அரங்கநாதனை தொடர்பு கொண்டு இருக்கலாம் ...தனியாக மொழி தெரியா பிரதேசத்தில்
    பட்ட வேதனைகளை படிக்குங்கால், அதனை எதிர்கொண்ட விதம் பாராட்டும் வண்ணம் உள்ளது . How to face adversity and overcome it என்று ஒரு புத்தகமே எழுதலாம் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.இப்போது உள்ளதுபோல் அப்போது தொழில்நுட்ப வசதி இருந்திருந்தால் எனக்கு கஷ்டம் இருந்திருக்காது.எனது கஷ்டத்தை எழுதி பதிவைப் படிப்போரையும்,
    கஷ்டப்படுத்தும் நிலை வந்திருக்காது!!

    புத்தகம் எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மொழி தெரியாத, தெரிந்தவர்கள் யாரும் இல்லாத ஊரில், தங்குவது பயணம் செய்வது என்பது, என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பயங்கரமான கற்பனைகள் பண்ண வைக்கும்.
    (தொடர்கின்றேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .
      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! அன்று நான் பட்ட அவஸ்தை சொல்லில் அடங்காது. இருப்பினும் அவையெல்லாம் அனுபவப் பாடமே.

      நீக்கு