திங்கள், 20 ஜூன், 2011

நினைவோட்டம் 48

கல்கி இதழுக்கு ‘வெள்ளம்’ என தலைப்பில் எனது
கதையை அனுப்பிவிட்டு காத்திருந்தபோது, அதற்குள்
இன்னொரு போட்டிக்கான விளம்பரம் வந்தது.
ஒரு நாவலை ஆய்வு செய்து எழுதவேண்டும்
என்பதே அது.

சிறுகதைப்போட்டியில் கலந்துகொண்ட‘அனுபவம்’(?)
இருந்ததால், அந்த போட்டியிலும் கலந்துகொள்ள
விரும்பினேன்!!!

எந்த நாவலைப் பற்றி எழுதலாம் என நினைத்தபோது,
எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு தேவன் அவர்களின்
‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவல் நினைவுக்கு வந்தது.

"எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே
இருக்கவேண்டும்.பேனாவை கீழேவைத்துவிடக்கூடாது.
அப்படி வைத்துவிட்டு எடுத்தால் அது கனக்கும்.
உலுக்குமரம் போடுவது போல் இருக்கும் என் அந்த
நாவலில் தேவன் அவர்கள் எழுதியிருந்தது ஏனோ
என்னை ஈர்த்ததால்,உடனே அந்த நாவலைப்பற்றிய
எனது கருத்தை எழுதி அனுப்பிவிட்டு முடிவுக்கு
காத்திருந்தேன்.

இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது. 15 வயதில் ஒரு நாவலை ஆய்வு
செய்து எழுதம் துணிவு(!) எவ்வாறு வந்தது என்று.

‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலை பற்றி விமரிசனம்
எழுதும்போது, எனக்கு சந்தேகம்தான். ஏனெனில்
அந்த போட்டிக்கு நாவலாக பிரசுரமானவைகளைப்
பற்றியே எழுதவேண்டும் என்பது விதி.

ஆனந்த விகடனில் தொடராக மட்டுமே வந்திருந்த
அந்த நாவல், அப்போது நூலாக வெளிவரவில்லை.
எனவே எனது படைப்பு நன்றாக இருந்தாலும்,
நிராகரித்துவிடுவார்கள் எனத்தெரியும்.

ஆனால் எனது கதை மட்டும் நிச்சயம்
தேர்ந்தெடுக்கப்படும் என்று ஏனோ எனக்குள்
ஒரு நைப்பாசை இருந்தது.

இரண்டு போட்டிகளுக்கும், எனது படைப்புகளை
அனுப்பும்போது, எனது பள்ளியின் முகவரியை
கொடுத்திருந்ததால், தினம் அஞ்சல் ஊழியர்
பள்ளிக்கு வரும்போது, நல்ல செய்தியுடன் எனது
வகுப்புக்கு அவர் வருகிறாரா என காத்திருப்பேன்.

கடைசியில் போட்டிகளின் முடிவு வந்தபோது எனது
கனவு நிறைவேறவில்லை.இரண்டு போட்டிகளிலுமே
எனக்கு தோல்விதான்.

எனது கதை தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு
ஏமாற்றத்தை தந்தாலும் ‘கல்கி’ அலுவலகத்திலிருந்து
நிராகரிக்கப்பட்ட எனது படைப்பு திரும்ப வரும் என
நினைத்து இருந்தேன்.

ஆனால் எனது படைப்புகள் இரண்டுமே திரும்ப
வரவில்லை. அப்போதுதான் தெரிந்தது. அவைகளை
திரும்பப்பெறவேண்டுமெனில் போதிய அஞ்சல்
தலைகள் வைத்து அனுப்பவேண்டுமென்று.

படைப்புகளை அனுப்பும்போது அவற்றின் படிகளை
எடுத்துவைக்காததால் எனது முதல் படைப்பு
என்னிடம் இல்லாமல் போய்விட்டது.

(மன்னிக்கவேண்டும் திரு சென்னை பித்தன் அவர்களே!
உங்களது விருப்பத்தை நிறைவேற்றமுடியவில்லை!!)

S.S.L.C தேர்வு முடிந்து விடுமுறையில் அப்போதைய
திருச்சி மாவட்டத்தில் இருந்த எனது பெரியம்மா
ஊரான கோமான் என்ற ஊருக்கு (தற்சமயம் இது
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது) போயிருந்தபோது,
‘குமுதம்’ வார இதழ் முதன் முதல் கதை
எழுதுபவர்களுக்காக, ஒரு போட்டி வைத்திருந்ததைப்
பார்த்தேன்.

அந்த போட்டிக்கும் கதை எழுத ஆசை திரும்ப வந்தது.
ஏற்கனவே எழுதி ‘சூடு’ கண்டிருந்ததால்,அந்த போட்டிக்கு
கதை எழுத ஏனோ முயற்சிக்கவில்லை.

ஒருவேளை எனது முதல் கதை, போட்டியில்
வெற்றி பெற்றிருந்தால், நானும் ஒரு எழுத்தாளனாக
ஆகியிருப்போனோ என்னவோ!

நல்லவேளை வாசகர்கள் தப்பித்துக்கொண்டார்கள்!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு, எங்கள் வங்கியின்,
ஊழியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியின்போது
கேட்ட, சிந்தனையை தூண்டும் ஒரு சொற்றொடர்
என்னை யோசிக்கவைத்தது. முதல் தோல்வியை
வெற்றிப்படியாக நினைத்து, திரும்பவும் கதை
எழுத முயற்சித்திருக்கலாமோ என்று.

என்னை சிந்திக்க வைத்த அந்த சொற்றொடர்
இதுதான்.

“You only fail, when you stop trying!



நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. //“You only fail, when you stop trying!//

    முத்தாய்ப்புக் கருத்து அருமை!இப்போதுதான் ஒரு எழுத்தாளர் ஆகி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. ஒரு எழுத்தாளர் ஆவதற்கு திறமைமட்டும் போதாது. அதற்க்கு அதிஸ்ரமும் தன்னம்பிக்கையும்
    அதிகம் தேவை என்பதனை நிறைந்த அனுபவம்கொண்டு
    வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா...வாழ்த்துக்கள்
    நீங்கள் மென்மேலும் வளம்பெற!....

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி அம்பாளடியாள் அவர்களே!

    பதிலளிநீக்கு