செவ்வாய், 24 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 6

ஒரு குடியிருப்பைச் சேர்ந்த அனைவரும் கோடை
விடுமுறை நாட்களில் ஒன்றாக வெளியூர் செல்ல
எண்ணினார்கள். வெளிநாடு சென்று வரலாமே என
சிலர் யோசனை தெரிவித்தபோது, அதை எல்லோரும்
முழு மனதோடு ஒத்துக்கொண்டு,வெளிநாடு செல்ல,
ஒரு பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் பணத்தை
செலுத்தி, குறிப்பிட்ட நாளில் பயணத்தை தொடங்கினர்.

அவர்கள் சென்ற விமானத்தில் பெரும்பாலோர் அவர்கள்
குழுவைச் சேர்ந்தவர்கள் ஆதலால், விமானப் பயணம்
தொடங்கியது முதல் ஒரே கொண்டாட்டம் தான்.

அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.காரணம்
விமானம் நடுக்கடலின் மேலே சென்று கொண்டிருந்த
போது விமான ஒட்டி செய்த ஒரு அறிவிப்புதான்.
திடீரென விமானத்தின் இன்ஜின்கள் பழுதடைந்ததால்
விமானத்தை அருகில் ஏதேனும் தீவு இருந்தால் அங்கே
கீழே இறக்கபோவதாகவும், எல்லோரும் தயாராக
இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

திடீரென எல்லோருடைய மகிழ்ச்சியும் காணாமல்
போய் அனைவரும் தங்களது இஷ்ட தெய்வத்திடம்
வேண்டத் தொடங்கிவிட்டார்கள்

நல்ல வேளையாக விமானியும், ஒரு ஆள் அரவமற்ற,
அனாந்தர தீவில் எந்தவித சேதாரமும், யாருக்கும்
ஏற்படாவண்ணம் சாமர்த்தியமாய் விமானத்தை
இறக்கிவிட்டார்.

எல்லோரும் பத்திரமாக தரை இறக்கியதற்கு
விமானிக்கு நன்றி சொன்னபோது அவர் ‘எனக்கு
நன்றி சொல்லவேண்டாம். இறைவனுக்கு நன்றி
சொல்லுங்கள்.

அதோடு இந்த தீவில் நம்மை யாராவது
வந்து காப்பாற்றும் வரை உயிர் வாழ தேவையான
எதுவுமே இல்லை. மேலும் இந்த தீவிற்கு அருகில்
ஆழம் இல்லாததால் கப்பல்கள் கூட வர வாய்ப்பு
இல்லை. எனவே யாராவது வந்து நம்மை காப்பாற்றி
அழைத்து செல்ல இறைவன் அருள் புரியவேண்டி
பிரார்த்திப்போம்.

இல்லாவிடிலோ அனைவரும் உண்ண உணவு இல்லாமல்,
எந்த வித உதவியும் கிடைக்காமல், அனாதைபோல்
மடியவேண்டியதுதான்.’ என்று சொன்ன பின்தான்
எல்லோருக்கும் தாங்கள் ஒரு ஆபத்திலிருந்து தப்பி,
இன்னொரு பேராபத்தில் சிக்கியிருக்கிறோம்
எனப்புரிந்தது.

அவ்வளவுதான் பழையபடி எல்லோரும் அலறத்
தொடங்கிவிட்டார்கள். வயதான தாய் தந்தையரை
யார் பார்த்துக்கொள்வார்கள் என்று சிலரும்,
மகளுக்கு திருமணம் நடத்த தாம் இல்லாமல்
போய்விடுவோமே என்று சிலரும், வாழவேண்டிய
வயதில், எல்லா வசதி இருந்தும்,வாழ்க்கையை
அனுபவிக்காமல் அற்பாயிசில் போகப்போகிறோமே
என்று பலரும் அழுதுகொண்டு, கடவுளிடம் காப்பாற்ற
வேண்டிக்கொண்டிருந்த போது அந்த குழுவில் இருந்த
ஒருவர் மட்டும், சந்தோஷமாக சிரித்துக்கொண்டு
கவலைப்படாமல் இருந்தார்.

அதைப்பார்த்த அனைவரும், கோபத்தோடு ‘என்ன,
நாங்கள் எல்லோரும் கவலையோடு இருக்கையில்,
நீ மட்டும் கவலைப்படாமல், சிரித்துக்கொண்டு
இருக்கிறாயே? உனக்கு என்னவாயிற்று?’ எனக்
கேட்டபோது, அவர் ‘அது ஒன்றுமில்லை.
நான் XYXYX வங்கியில் இந்த மாதம் கிரெடிட்
கார்டுக்கான பணம் ரூபாய் 50,000 கட்டவேண்டும்.
அதை எப்படி கட்டுவது என எண்ணிக்கொண்டிருந்தேன்.
நல்ல வேளை. தப்பித்தேன் என நினைத்து
சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.’ என்றார்.

அப்போது அதைக் கேட்ட விமான ஒட்டி உற்சாகம்
பொங்க சொன்னார்,‘பயணிகளே. கவலை வேண்டாம்.
நாம் அனைவரும் பத்திரமாக ஊர் போய் சேர்ந்துவிடலாம்.
ஏனெனில் அந்த வங்கிக்காரர்கள் பணம் கட்டத்தவறிய
வாடிக்கையார்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து
விடுவார்கள். அப்படி அவர்கள் இந்தநண்பரைத்
தேடிவரும்போது அவர்கள் உதவியுடன்
நாம் தப்பிவிடலாம்’ என்றார்!

நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

வியாழன், 19 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 5

அந்த வங்கியின் கிளைக்கு வந்து சேர்ந்த புதிய
மேலாளர் வாடிக்கையாளர்களுக்கு நல்ல
சேவையை வழங்க விரும்பினார்.அதன் முதல்
கட்டமாக, உள்ளூர் மக்களுக்கு புரியும்படியாக
வங்கியின் ‘கவுண்டர்’ மேல் வைக்கப்பட்டிருந்த
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தகவல்
பலகைகளுக்கு பதிலாக தமிழில் தகவல்
பலகைகளை வைக்க விரும்பினார்.

அது பற்றி சார்பு மேலாளரிடம்(Sub Manager)
கலந்து ஆலோசித்தபோது,அவரும் அதை
ஆமோதித்து,ஆங்கிலத்தில் உள்ள சொற்களுக்கு
சரியான தமிழ் சொற்களை எழுதலாம்
எனக்கூறினார்.

ஆனால் மேலாளரோ,ஆங்கிலத்துக்கு ஈடான
தமிழ் சொற்களை மொழிபெயர்த்து எழுதினால்,
வாடிக்கையாளர்களுக்கு புரியாமல் போகலாம்.
எனவே மொழிபெயர்க்காமல்,ஆங்கிலத்தில்
உள்ளவைகளை அப்படியே தமிழில் எழுதிவிட
ஏற்பாடு செய்து விடுங்கள்.’என கூறிவிட்டார்.
அதாவது Translation வேண்டாம்.
Transliteration போதும்.
எனக்கூறிவிட்டார்.

அவ்வாறே,சார்பு மேலாளரும் தகவல் பலகையை
தமிழில் வைக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

மறுநாள் காலை மேலாளர் கிளைக்கு வந்தபோது
எல்லா தகவல் பலகைகளிலும் தான் சொன்னபடியே
தமிழில் எழுதப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியுடன்
தனது அறைக்கு சென்றார்.

வங்கியின் அலுவலக நேரம் தொடங்கியதும்,
வழக்கம் போல் வாடிக்கையாளர்கள்
வரத்தொடங்கினர்.மேலாளர் தனது அறையிலிருந்து
பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட‘கவுண்டரில்’ கூட்டம்
அதிகமாயிருந்தது.நேரம் ஆக ஆக வங்கிக்குள்
ஏகப்பட்ட கூட்டம் சேர்ந்துவிட்டது.ஆனால் வெளியே
ஒரே சத்தம். வங்கி அலுவலர்கள் ஏதோ பேசி
சமாளித்துக்கொண்டு இருந்தார்கள்.

மேலாளருக்கோ சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
தாம் வந்து பதவி ஏற்றதும் செய்த ஒரு சிறு
மாற்றத்தால், வங்கிக்கு அதிக வாடிக்கையாளர்கள்
வந்துவிட்டனரே என்று.

ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.
அப்போது உள்ளே வந்த வங்கியின்
வாடிக்கையாளரான டாக்டர் ஒருவர் உள்ளே வந்து
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ‘என்ன சார்,
இந்த சேவையெல்லாம் வங்கியில்
தொடங்கிவிட்டீர்களா?’எனக் கேலியாகக் கேட்டார்.

மேலாளருக்கோ ஒன்றும் விளங்கவில்லை.அந்த நேரம்
பார்த்து உள்ளே வந்த சார்பு மேலாளர்,‘சார்.
நாம் தமிழில், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே
எழுதியது தப்பான பொருளைக்கொடுத்து,
வந்தவர்களுக்கு பதில் சொல்லவே நேரம்
போதவில்லை.நான் சொன்னது போல் மொழி
மாற்றம் செய்திருக்கலாம்.’என்றார்.

மேலாளர் ‘அப்படி என்ன ஆகிவிட்டது?’என்றதும்,
சார்பு மேலாளர், ‘சார்,‘Cheques & Bills’என்பதை
அப்படியே தமிழில் ‘செக்ஸ் & பில்ஸ்’ என்று
எழுதியதால் வந்த வினை. யாரும் ‘கவுண்டரில்’
உட்கார்ந்து வேலை பார்க்கமுடியவில்லை.
மொழிமாற்றம் செய்யவேண்டாமென்றால்
பலகைகளில் பழையபடி ஆங்கிலத்திலேயே
எழுதிவிடலாம்.’ என்றார்.

அப்போதுதான் டாக்டர் கேட்டதின் அர்த்தம்
புரிந்தது மேலாளருக்கு.

நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

திங்கள், 16 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 4

ஒரு நாள் காலை ஒரு கால்நடை மருத்துவ மனைக்கு
ஒருவர் வந்து, அங்கிருந்த மருத்துவரைப் பார்த்து,
‘டாக்டர்,நான் பக்கத்து ஊரில் வேலை பார்க்கிறேன்.
தங்களிடம் சிக்கிச்சை பெறுவதற்காக விடுப்பில்
வந்திருக்கிறேன்.எனவே தயவு செய்து தாங்கள் எனக்கு
சிச்சை அளிக்கவேண்டும்.’என்றார்.

டாக்டர் அவரை ஆச்சரியத்தோடு பார்த்து,‘நீங்கள்
தவறாக இங்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் செல்லவேண்டிய‘கிளினிக்’எதிர் சாரியில்
உள்ளது.’என்றார்.

உடனே அவர்,’இல்லை இல்லை டாக்டர். நான்
தங்களிடம் சிகிச்சைப் பெறத்தான் வந்திருக்கிறேன்.’
என்றார்.

டாக்டர் அவரிடம்,உங்களுக்கு தெரியும் என
நினைக்கிறேன்.நான் ஒரு கால்நடை மருத்துவர்.
மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் ஸ்பெஷலிஸ்ட்’
என்றார்.

அதற்கு வந்தவர்,‘எனக்கு தெரியும் டாக்டர் நீங்கள்
ஒரு கால்நடை மருத்துவர் என்று.ஆனாலும் நீங்கள்
தான் எனக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்.’என்றார்
விடாப்பிடியாக.

டாக்டரோ பொறுமையாக,‘அது என்னால் முடியாது.
ஏனெனில் நீங்கள் என்னைப்போல் பேசுகிறீர்கள்.
என்னைப்போல் சிந்திக்கிறீர்கள். எனவே நீங்கள்
மிருகமல்ல.நீங்களும் என்னைபோன்ற ஒரு மனிதன்.
ஆகையால் நீங்கள் எதிரில் உள்ள ‘கிளினிக்’குக்கு
சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.’என்றார்.

அதற்கு அவர்,‘எனக்கு தெரியும் டாக்டர்.நானும்
ஒரு மனிதன் தான் என்று.ஆனால் எனக்கு ஒரு
சிக்கல்.

காலையில் எழுந்திருக்கும்போது ஒரு’குதிரை’
போல் எழுகிறேன். அலுவலகத்திற்கு ஒரு’மான்’
போல் ஓடுகிறேன். நாள் முழுதும் அலுவலகத்தில்
ஒரு’கழுதை’போல் வேலை செய்கிறேன்.எனது
மேலாளர் முன் ஒரு‘நாய்’போல்வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்.வீட்டிற்கு வந்ததும்,
என் குழந்தைகளுடன்,ஒரு’குரங்கு’போல்
விளையாடிக்கொண்டிருக்கிறேன்.என் மனைவி
முன் ஒரு‘முயல்’போல் பதவிசாக
நடந்துகொள்கிறேன்.அதனால் தான் தங்களிடம்
வந்தேன்.’என்றார்.

டாக்டர் அவரிடம்,‘நீங்கள் வங்கியில் வேலை
செய்கிறீர்களா?’
என்றார்.

அவர்‘ஆமாம்.'என்றதும்,டாக்டர்,உற்சாகத்தோடு,
‘அப்படியானால் என்னைத்தைவிர வேறு யாராலும்
உங்களுக்கு சிகிச்சை தர இயலாது.
உட்காருங்கள்.’என்றார்!!


நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

சனி, 14 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 3

ஒரு வங்கி நடத்திய நேர்முகத்தேர்வில், அலுவலராக
பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞர் பணியில்
சேர ஆவலோடு குறிப்பிட்ட நாளில் அவர் வேலையில்
சேரவேண்டிய வங்கியின் கிளைக்கு காலையில் சென்றார்.

அவர் சென்ற நேரம் காலை 9 மணி. அந்த வங்கியின்
கிளையின் முன் ஒரே கூட்டம்.என்னவென்று
எட்டிப்பார்த்ததில் வங்கியின் பூட்டப்பட்ட‘ஷட்டருக்கு’
வெளியே ஒரு கழுதை படுத்திருந்தது.

அதை எழுப்ப அங்கிருந்த வங்கிப் பணியாளர்கள்
உட்பட அனைவரும் முயற்சி செய்தும் அது சிறிதும்
அசைந்து கொடுக்கவில்லை. சில விளயாட்டு
பிள்ளைகள் அதன் வாலைக்கடித்தும் அது
எழுந்திருக்கவில்லை.

நேரமோ ஓடிக்கொண்டிருந்தது.வங்கி பணி ஆரம்பிக்கும்
நேரமான 10 மணி நெருங்கிக்கொண்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் வேறு வார ஆரம்பித்துவிட்டார்கள்.
வேலையில் சேர வந்த இளைஞனோ,‘என்ன இது.முதன்
முதல் வேலையில் சேர வந்த போதே தடங்கலாக
இருக்கிறதே’என எண்ணினாலும்,கழுதையைப்
பார்த்தால்,‘நல்ல சகுனம்‘ யாரோ சொன்னது
நினைவுக்கு வர சமாதானமானார்.

அந்த நேரத்தில் அந்த வங்கியின் கிளை மேலாளர்
அங்கு வந்து ‘ஏன், கிளையை திறக்கவில்லை?’
என விசாரித்தார். ஊழியர்களும்,
அலுவலர்களும் நிலைமையை சொன்னபோது,
அவர் ஒன்று சொல்லாமல் அந்த கழுதை அருகே
சென்று அதன் காதில் ஏதோ சொன்னார்.
அவ்வளவுதான் அந்த கழுதை திடீரென எழுந்து
ஓட்டம்பிடித்தது.

அதைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். அந்த
மேலாளர் என்ன சொன்னார் அல்லது ஏதேனும்
மந்திரம் சொன்னாரா என்று அறிய எல்லோருக்கும்
ஆவல்.ஏன் வேலைக்கு சேர வந்த இளைஞனுக்கும்தான்.

வங்கியின் உள்ளே சென்றதும்,அலுவலர்கள் எல்லோரும்,
மேலாளரின் அறைக்கு சென்று அவர் எவ்வாறு
அந்த கழுதையை விரட்டினார் விசாரித்தார்கள்.

வெளியே வரும்போது எல்லோரும் சிரித்துக்கொண்டே
வந்தனர்.வேலையில் சேர வந்த இளைஞனுக்கோ
அதை தெரிந்த கொள்ள ஆவல் இருந்தும், தான்
வேலையில் சேர்வதுதான் முதல் வேலை என்பதால்
தயக்கத்தோடு மேலாளரின் அறைக்கு சென்று தனக்கு
வந்த நியமன உத்திரவை காண்பித்து வேலையில்
சேர்ந்தார்.

அவருக்கு தரப்பட்ட பணியை ஒரு முது நிலை
அலுவலரின் உதவியோடு செய்தாலும், மேலாளர்
எவ்வாறு கழுதையை விரட்டினார் என்பதே அவரது
மனதில் இருந்தது.

உணவு இடைவேளையில் பிற அலுவலர்களை
சந்தித்து அறிமுகம் செய்து கொண்டபோது,எல்லோரும்
ஒருவருக்கொருவர் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டனர்.

தயங்கிக்கொண்டே,அந்த புதிய அலுவலர், தனக்கு
வேலை சொல்லிக்கொடுத்த மூத்த அலுவலரிடம்.
‘சார். ஒரு சந்தேகம்.எல்லோராலும் முடியாததை
என்ன செய்து மேலாளர் அந்த கழுதையை விரட்டினார்?
தயை செய்து சொல்லுங்கள் என்றார்.

அவரும் சிரித்துக் கொண்டே‘அது ஒன்றும் இல்லையப்பா.
மேலாளர் அந்த கழுதையின் காதில் நீ இங்கிருந்து
செல்லாவிடில் உன்னை இங்கு ஆபீசராக ஆக்கிவிடுவேன்
என்றாராம். அதனால்தான் கழுதை பயந்து கொண்டு
ஓடிவிட்டது!’ என்றார்.

‘அது சரி சார். உணவு இடைவேளையின் போது
என்னைப்பார்த்து மற்ற ‘ஆபீசர்கள்’ஏதோ சொல்லி
சிரித்தார்களே என்ன சார் அது?’என்றார் அந்த இளைஞர்.

‘அதுவா,உன்னைப்பார்த்ததும் காலையில் மேலாளர்
சொன்னது அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது,
அதனால் "பொதியை சுமக்க இன்னொரு கழுதை
வந்துவிட்டது"
, என சொல்லி சிரித்தார்கள்.’ என்றார்!!


நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

திங்கள், 9 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 2

சென்ற பதிவில்,வங்கியாளர்களைப் பற்றிய ஒரு Rhyme
ஒன்றை பதிவேற்றி இருந்தேன்.நண்பர் திரு ADAM
அவர்கள் அது ஜோக் அல்ல என்று பின்னூட்டம்
இட்டிருந்தார்.

அவருக்கும்,அவரது கருத்தை ஆதரிக்கும்
நண்பர்களுக்கும் இலண்டனிலிருந்து வரும்
'The Guardian' சொன்ன கருத்தை கீழே தருகிறேன்.

“What’s the problem with Banker Jokes? Bankers
don’t think they’re funny, normal people
don’t think they’re Jokes.”

எனவே நான் பதிவேற்றுவது நகைச்சுவையாக சிலருக்கு
தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதில் கிண்டல்
இருப்பதை நிச்சயம் அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்
என நம்புகிறேன்.

இனி !

ஒரு மனிதன் நீண்ட நாட்கள் கடவுளை நினைத்து
ஊண் உறக்கமின்றி தவம் இருந்தான்.அவனது தவத்தை
மெச்சி கடவுள் அவன் முன் தோன்றி,‘பக்தா! உன்
தவத்தை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்.’ என்றார்.

அதற்கு அந்த மனிதன் ‘இறைவா! இப் பிறவியில்
நான் பார்த்த வேலைகள் எனக்கு பிடிக்கவில்லை.
மன நிறைவும் கிடைக்கவில்லை.எனவே அடுத்த
பிறவியிலாவது நான் விரும்பும் வேலை கிடைக்க
வரம் தரவேண்டுகிறேன்.’ என்றான்
.
கடவுளும் ‘சரி அப்படியே ஆகட்டும்.நீ என்ன
வேலையில் சேர விரும்புகிறாய் ?’என்றார்.

‘ஈசனே! நான் அடுத்த பிறவியில் ஒன்று
திரைப்பட நடிகனாக வேண்டும் அல்லது
இந்திய அரசுப் பணியில் (I.A.S.) சேரவேண்டும் அல்லது வங்கி மேலாளராக வேண்டும்.’என்றான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வுலகில்
எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூன்றை
மட்டும் ஏன் இவன் தேர்ந்தெடுத்திருக்கிறான்
என எண்ணி, ’ஏனப்பா, நடிகனாக வேண்டும்
என்கிறாய்?’ என்றார்.

‘ஐயனே! திரைப்பட நடிகனானால் வயதானாலும்
கூட நடித்துக்கொண்டு இருக்கலாம். எப்போதும்
இளைஞனாக நடிப்பதால் தன்னைவிட பல மடங்கு
வயதில் குறைந்த குமரிகளோடு ‘டூயட்’ பாடி
காதல் செய்ய இயலும். தயாரிப்பாளர் செலவில்
உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பார்க்கமுடியும்.

ஒரே ஆளாக இருந்து அநேகம் பேரை ஒரே சமயத்தில்
துவம்சம் செய்ய முடியும். சீறி வரும் ‘புல்லெட்’டை
கூட பல்லால் கடித்து பிடித்து திரும்ப வந்த இடத்திற்கே
அனுப்பமுடியும்.

நடிப்புக்காக தரும் பணத்தை கறுப்பு பணமாக
வாங்கிக்கொண்டு வருமான வரித்துறையையும்
அரசையும் ஏமாற்ற முடியும். அப்பாவி/ஏமாளி
இரசிகனை உசுப்பேற்றி மன்றம் வைக்க ஆதரவு
கொடுத்து பின்னால் அதை அரசியல் கட்சியாக மாற்றி
பதவியில் அமர முடியும்.மொத்தத்தில் படிக்காமலேயே
எல்லா வசதிகளையும் அனுபவிக்க முடியும்.’ என்றான்.

‘சரி.ஏன் I.A.S. ஆக வேண்டும் என்கிறாய்?’ என்றார் கடவுள்.

I.A.S. ஆனால் தொழில் நுட்ப படிப்பு
படிக்க வில்லை என்றாலும் கூட,ஓராண்டு முசோரியில்
தரும் பயிற்சிக்கு பிறகு ‘எல்லாம் தெரிந்தவராக’
ஆகிவிடலாம். பணிக்காலத்தில் Electronics Corporation
தலைவராகவும் ஆகலாம். Atomic Energy Commission
தலைவராகவும் ஆகலாம். The Indian Council of
Agricultural Research (ICAR)
தலைவராகவும்
ஆகலாம் அல்லது Hindustan Aeronautics Limited (HAL)
தலைவராகவும் ஆகலாம். மொத்தத்தில் நினைத்த
துறைக்கு தலைவராக ஆகலாம்.

‘ஊதிய கமிஷன்’ சம்பளம் நிர்ணயிக்கும்போது
தங்களுக்கு எல்லோரை விடவும் அதிகம் வருமாறு
பார்த்து கொள்ளலாம். பணியின் போது அரசு செலவில்
வெளி நாட்டில் சென்று படித்தும் வரலாம்.

பணி நிறைவுக்கு பின் ‘World Bank அல்லது
'Asian Development Bank’ போன்றவைகளில்
கொழுத்த சம்பளத்தில் அமர்ந்துவிடலாம்.
அதனால் தான் I.A.S. ஆக விரும்புகிறேன்’
என்றான்.

‘அது சரி.ஏன் வங்கி மேலாளராக ஆக
வேண்டுமென்கிறாய்?’ என்றார் கடவுள்.

‘இறைவா, வங்கி மேலாளராக ஆனால்,
தொழில் நுட்பம் தெரியாவிட்டாலும் கூட,
தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் கடன்
அனுமதி வழங்கமுடியும். காரணம் இல்லாமலேயே
கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியும்.
பெரிய முதலாளிகளுக்கு கடனைக்கொடுத்துவிட்டு
அவைகளை வாராக்கடன் என அறிவித்து அதற்கான
‘பலனை’ அனுபவிக்க முடியும்.

மொத்தத்தில் ஒரு அரசனைப்போல் வாழமுடியும்.’
என்றான்.

அவனுடைய பதிலைக்கேட்ட கடவுள்
‘மறைந்தே’ போனார்!!



நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

வெள்ளி, 6 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 1

நகைச்சுவை பல ரகம்.பிறர் மனதை புண்படுத்தாத
வகையில் படிப்போருக்கும்,கேட்பொருக்கும் அவை
சிரிப்பை அல்லது புன் சிரிப்பை உண்டாக்குமானால்
உண்மையில் அவை நகைச்சுவைதான்.

நம்மிடையே உலாவி வரும் நகைச்சுவை
துணுக்குகளை வகைப்படுத்தினால் அவை இனம்
சார்ந்த,மொழி சார்ந்த,தொழில் சார்ந்த,
நகைச்சுவைகள் என்ற பல தலைப்பின் கீழ்
பிரிக்கலாம்.

இங்கே நான் வங்கித்துறையைச் சேர்ந்தவன்
என்பதால் வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
துணுக்குகள் மற்றும் வங்கியாளர்களை பற்றிய
மற்ற துணுக்குகளையும் தரலாமென நினைக்கிறேன்.


நான் படித்த, கேட்ட, மின் அஞ்சலில் வந்த
என் வங்கி பயிற்சி கல்லூரியில் சொன்ன
துணுக்குகளைத்தான் பதிவேற்ற இருக்கிறேன்.
மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.

மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு Rhymes
எனப்படும் எதுகை மோனை உடன் கூடிய பாடல்களை
சொல்லிக்கொடுப்பார்கள். அப்படிப்பட்ட பாடல்
ஒன்றை மாற்றி, வங்கியாளர்களுக்கு பொருந்தும்
வகையில் எழுதப்பட்ட ஒரு பாடல் எனக்கு
மின் அஞ்சலில் வந்தது. அதை கீழே தந்திருக்கிறேன்.
தமிழில் மொழி பெயர்த்தால் அதனுடைய வீச்சு
குறைந்துவிடுமோ என்ற ஐயத்தால் அதை
ஆங்கிலத்லேயே தந்திருக்கிறேன்.

A BANKER'S RHYME


Johny Johny! Yes Papa!
Banking service? Yes Papa!
Many tensions? Yes Papa!
Work pressure? Yes Papa!
BP-Sugar? Yes Papa!
Family life? No Papa!
Wage revision? Ha Ha Ha!!!





நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

செவ்வாய், 3 மே, 2011

எங்கே மனிதாபிமானம்?

இன்று காலை மின் கட்டணத்தை செலுத்தலாம் என
எண்ணி மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலகத்திற்கு
காலை சுமார் 8.30 மணிக்கு சென்றேன்.

மின் வாரியத்தின் புதிய முறைப்படி மின் அளவீட்டார்கள்
வீட்டிற்கு வந்து மின் உபயோகத்தை கணக்கிட்டு
நமது மின் அட்டையில் பதிவு செய்த நாளிலிருந்து,
இருபது நாட்களுக்குள் கட்டணம் கட்டினால் போதும்.
இருந்தாலும் அதுவரை ஏன் காத்திருக்கவேண்டும் என
எண்ணி மின் பயன் கணக்கிட்ட நான்காம் நாளே
கட்டணம் செலுத்த கிளம்பிவிட்டேன்.

இன்றைய நாளை தேர்ந்தெடுத்ததன் காரணம் இன்று
செவ்வாய் கிழமை என்பதால் தான்.சென்னையில்
செவ்வாயன்று பலர் பணம் செலவழிக்க தயங்குவார்கள்
என்பதால், கட்டணம் செலுத்தும் இடத்தில் கூட்டம்
இருக்காது என நினைத்து அங்கு சென்றால்,மிக நீண்ட
வரிசையில் பயனாளிகள் பணம் செலுத்த நின்றிருந்தனர்.

எல்லோரும் என்னைப்போல் நினைத்து வந்திருப்பார்கள்
போலும்!

மின் வாரிய அலுவலகத்துக்கு வெளியே
போடப்பட்டிருந்த பந்தல் வரை ‘கியூ’
இருந்ததால் நான் வெளியே வெயிலில்
நிற்கவேண்டியதாயிற்று.அப்போது பந்தலின்
உள்ளே,பணம் கட்டுவோர் வரிசைக்கு அருகே
நின்றுகொண்டிருந்த ஒரு பெண் (வயது சுமார் 25
இருக்கலாம்) என்னிடம் சைகை காண்பித்து தான்
எனக்கு முன்பு இருப்பதை உறுதி படுத்தினார்.
காலை 8.30 மணி வெயிலில் கூட நிற்கமுடியாமல்
உள்ளே நின்றுகொண்டிருந்தார்.

பணம் வாங்கும் ஊழியர் ஒவ்வொருவரிடமும்
சில்லறை கேட்டு இல்லை, என்போரிடம் வாதம்
செய்து கொண்டிருந்ததால் வரிசை மெல்ல நகர்ந்து
கொண்டு இருந்தது.எனக்கு முன்பு நிற்க வேண்டிய
பெண்ணுக்கு முன்னால் இருந்தவர் பணம் கட்ட
தொடங்கியவுடன் அந்த பெண் வந்து கியூவில்
சேர்ந்துகொண்டார்.

அப்போது சுமார் 80 வயது இருக்கும் மூதாட்டி ஒருவர்
கட்டணம் செலுத்த வந்தார். வெகு தூரம் நடந்து
வந்து இருப்பார் போலும். வியர்வை முகத்தில் வழிய,
மிகவும் களைப்போடும், அலுப்போடும் வந்து எங்கள்
அருகே இருந்த படிக்கட்டில் அமர்ந்துவிட்டார். அவர்
பெரு மூச்சு விடுவதை பார்க்கவே கஷ்டமாயிருந்தது.

அப்போது எங்கள் வரிசையில் இருந்த ஒரு பெண்
(அவருக்கு தெரிந்தவர் போலும்) ‘ஏன் ஆயா,
இந்த வெயிலில் நீ வரணுமா? என்னிடம்
கொடுத்திருந்தால் நான் கட்டியிருக்கமாட்டேனா?
ஆமாம் ஏன் உன் மருமகள் வந்து கட்டியிருக்கலாமே?’
என்றார். அதற்கு அந்த மூதாட்டி, என்ன செய்வது
எல்லாம் என் தலையெழுத்து. இந்த வேகாத வெயிலில்
வறுபடவேண்டும் என்று இருக்கிறது போலும்’ என்றார்.

உடனே அந்த பெண் ‘ ஆயா நீ கியூவில் நிற்காமல்
முன்னால் நிற்பவரிடம் சொல்லிவிட்டு, பணத்தை
கட்டு.’ என்றார். அந்த மூதாட்டியும் எனக்கு முன்னால்
பணம் கட்ட தயாராக இருந்த அந்த ‘இளைஞி’யிடம்,
'அம்மா. நான் உங்களுக்கு முன்னால் கட்ட
அனுமதிப்பீர்களா?’ என்றார். ஆனால் அந்த
பெண்ணோ கொஞ்சம் கூட வயதுக்கு மதிப்பு
தராமல் மிகவும் காட்டமாக,’பின்னால் இருப்பவர்களிடம்
கேட்டுவிட்டு கட்டு’ எனச்சொல்லிவிட்டு தன் முறை
வந்ததும் பணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

தன்னாலேயே வெயிலில் நிற்க முடியவில்லையே
அந்த வயதான மூதாட்டி எவ்வாறு நின்று கட்டுவார்
என்று கூட யோசிக்கவில்லை. உடனே நான்
‘அம்மா யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
நீங்கள் எனக்கு முன்னால் பணம் கட்டுங்கள்.’
என்றேன். பின்னால் இருந்த ஒருவரும் அதை
எதிர்க்கவில்லை.

அந்த பெண் கட்டணத்தை கட்டிவிட்டு என்னை
ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு தனது துப்பட்டாவை
தீவிரவாதிகள் முகத்தை மறைப்பதுபோல்
கட்டிக்கொண்டு அவரது வாகனத்தில் பறந்துவிட்டார்.
பின் அந்த மூதாட்டி கட்டணத்தைக் கட்டிவிட்டு
எனக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

நான் கட்டணத்தை கட்டிவிட்டு வீடு வரும் வரை
அந்த சம்பவத்தையே எண்ணி வந்தேன். அந்த
மூதாட்டிக்கு வழி விட்டிருந்தால் அந்த பெண்ணுக்கு
சில நிமிடங்கள்தான் தாமதமாயிருக்கும். அந்த
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூட அவருக்கு
இல்லையே என நினைத்து வருந்தினேன்.

வயதானவர்களுக்கு இளையோர் கொடுக்கும்
மரியாதை குறைந்துவருகிறதா? அல்லது அது
இல்லவே இல்லையா?

நீங்களே சொல்லுங்கள்!