ஞாயிறு, 15 மார்ச், 2009

கம்பசித்திரம்

சிலசமயம் ஒரு கஷ்டமான வேலையைப்பற்றி பேசும்போது, அது என்ன கம்பசித்திரமா என சொல்வது வழக்கம்.

ஆனால் கவிச்சக்ரவர்த்தி கம்பன் ஒரு கவிஞன் என்பது தான் தெரியும். அவன் கவிதை எழுதியதோடு சித்திரமும் வரைந்தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதபோது ஏன் கம்ப சித்திரம் என சொல்கிறோம் என்பது நம்மில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம்.

இரவிவர்மா போன்ற கைதேர்ந்த ஓவியர்கள் வரைந்த சித்திரங்களில் அவர்கள் உருவாக்கிய காட்சிகளை அல்லது உருவங்களை பார்க்கும்போது நாமே நேரில் அவைகளை/அவர்களை பார்ப்பது போல் உணரமுடியும். அதுபோல கம்பனோ தூரிகை உபயோகிக்காமலேயே கவிதையில் சித்திரம் தீட்டியுள்ளான் என்பதை அவன் கவிதையை படித்தமாத்திரத்திலேயே அறியமுடியும்.

கம்ப ராமாயணத்தை படிக்கும்போது கம்பனுடைய கற்பனைத்திறனும் சொற் திறனும் அவன் குறிப்பிடுகின்ற காட்சியை நம்முன் நேரில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது அனுபவிக்கவேண்டிய உண்மை. அனுமான் இலங்கைக்கு செல்ல கடலைத்தாண்டுகிறான். அதைப்பற்றி சுந்தர காண்டத்தில், கடல் தாவும் படலத்தில்


வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை

தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்

கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்

மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன்.


என்கிறான் கம்பன்.

அதாவது அனுமான் தன் வாலை உயரே தூக்கி, வலிமையான கால்களை மடக்கி, மார்பைக் குறுக்கி, பெருமை மிகு தோள்கள் பூரித்துப் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி,காற்றின் விரைவைக் கொண்ட கைகளை முன்னே நீட்டி, தலை பிரம்மலோகத்தை அளாவ, மற்றவர் கண் காணமுடியாதவாறு மிகுந்த உயரத்தில் வேகத்தோடு தாவினானாம்.

இந்த பாடலை படிக்கும்போது, நம் கண் முன்னே விரிந்து படர்ந்த கடலும், அதன் மேலே அனுமான் கால் மடக்கி கைநீட்டி பறப்பதும் முப்பரிமாண காட்சியாக தெரிவதை நிச்சயம் நம்மால் உணரமுடியும்.

உண்மையில் சித்திரம் வரைவதே கடினம். அப்படி வரைந்தாலும், நம்மில் சிலர் வரைந்த சித்திரங்களின் கீழே அவை என்ன,என்று எழுதினால்தான் நமக்கு தெரியும். இல்லாவிட்டால் அவை தெனாலிராமன் சுவற்றில் குதிரை வரைந்த கதையாகிவிடும். கவிதையின் மூலம், நாமே நேரில் பார்ப்பது போன்ற காட்சிகளை உருவாக்குவது என்பது கடினமான காரியம். அதை கம்பன் செய்திருப்பதால்தான் அதை கம்பசித்திரம் என்கிறோம்!

8 கருத்துகள்:

  1. நினைவு தடங்கள் வலைப்பூ வழியாக தங்கள் வலைப்பூவை அடைந்தேன்.

    பல அருமையான வாழ்க்கை நயங்களை உரைக்கும் தங்கள் இடுகைகள் பலரையும் அடைய வேண்டும். தேன்சிட்டு வளையத்தில் தங்கள் வலைப்பூவை இணைத்து கொள்ளுங்கள்

    பல புது வாசகர்களும் இதன் மூலம் அறிமுகமாவதற்கு வாய்ப்பு பெருகும்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கபீர் அன்பன். தேன் சிட்டு வளையத்தில் இணைக்க இருக்கிறேன் எனபதை தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கம்ப சித்திரம் முதன் முதலாக விளக்கம் அறிந்தேன். அடிக்கடி பாவிப்போம் இதை., ஆனால் கம்ப சூத்திரம் என்றே மருவி பாவித்தோம். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் வாழ்த்துகள் சகோதரரே.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், தங்களின் கருத்துக்கும் நன்றி. திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. கம்ப சூத்திரம் என்றே இதுவரை நானும் அறிந்திருந்தேன். கம்ப சித்திரம் அறியச் செய்தமைக்கும் கம்பராமாயணக் காட்சியை அழகுற விளக்கியமைக்கும் மிகவும் நன்றி.

    வலைச்சரம் வழியே தங்களை அறிந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி திருமதி கீதமஞ்சரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. “கவி கண்காட்டும் ” என்பதற்குப் பொருள் இதுதான்.

    நல்ல கவிதை அல்லது எழுத்து என்பது சூக்குமத்தைத் தூலமாக்க வேண்டும்.

    உங்கள் நினைவலைகளில் நான் அது காண்கிறேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ‘கவி கண்காட்டும்’ என்ற புதிய சொற்றொடரை அறிந்துகொண்டேன். நன்றி!

      நீக்கு