புதன், 11 மார்ச், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 3

மரங்கள்!
மரங்களைப்பார்க்கையில் நமக்கு அவைகள் நிழல் தருவதும் மழை பெற உதவுவதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் மரங்களைப்பற்றி இயற்கை ஆர்வலர்களிடம் கேட்டால் அவை எவ்வாறு காற்றில் மாசு படா வண்ணம் எவ்வாறு நம்மை காப்பாற்றுகிறது என்று விபரமாக சொல்வார்கள்.
ஒரு தாவர இயல் நிபுணரிடம் கேட்டால் அவை எந்தெந்த குடும்பத்தைச்செர்ந்தவை என்றும் அவைகளின் தாவர இயல் சிறப்பு பற்றியும் விளக்குவார்கள்.
ஒரு விவசாய விஞ்ஞானியிடமோ அல்லது ஒரு வன இயல் நிபுணரிடமோ கேட்டால் அவைகளை எவ்வாறு வளர்ப்பது என்றும் நல்ல மரங்களை எவ்வாறு கண்டறிவது என்றும் சொல்வார்கள்.
ஒரு மனித வள மேம்பாட்டு நிபுணரிடம் கேட்டால் மரங்கள் மூலம் தலைமைப்பண்பு பற்றி விளக்குவார்கள்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பார்வையில் மரங்களைப்பற்றி பேசக்கூடும்.
ஆனால் நம் ஔவை பாட்டிக்கோ நல்ல மரங்கள் என்றால் என்ன தெரியுமா? கொப்பும் கிளையுமாய் காட்டிலே வளர்ந்து நிற்பவை நல்ல மரங்கள் அல்லவாம். படித்தவர்கள் நிறைந்த சபையில் படிக்க தெரியாமல் நிற்கிறவனே நல்ல மரம் என்று படிக்காதவர்களை,


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன்மரம்


என சாடுகிறாள்.பாட்டியின் பாடலில் கிண்டலை விட ஆதங்கமே உள்ளது என்பதுதான் உண்மை.

பாட்டியின் சாடலை அங்கதம் எனவும் சொல்லலாம்.

6 கருத்துகள்:

  1. பாரதி பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும் போது பார்த்து நிற்கும் மக்கள் புலம்பலை "நெட்டை மரங்களென நின்று புலம்புகிறார்" என்று ஒரு கொட்டு கொட்டுவார்.

    பதிலளிநீக்கு
  2. "ஞாபகம் வருதே... said...
    பாரதி பாஞ்சாலி சபதத்தில்"

    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

    வே.நடனசபாபதி

    பதிலளிநீக்கு
  3. அன்பின் நடன சபாபதி - அவ்வையின் கூற்று இக்காலக் கட்டத்தில் உண்மையாக பலரை நன்மரமாக்கிக் காட்டுகிறது. மரங்கள் பழகப் பழக மனிதர்களாக மாறி விடுவார்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு
  4. வணக்கம்.

    மூலத்தில் சவை நடுவே என்று வாசித்ததாக நினைவு. தவறிருக்கலாம்.

    வாசியா நின்றான் என்பதற்கு வாசிக்காமல் நின்றான் என்பது பொருளன்று.

    நிகழ்கால இடைநிலைகள் தமிழில் மூன்றுள.

    1. கிறு - வாசிக்கிறான்
    2. கின்று - வாசிக்கின்றான்.
    3. ஆநின்று - வாசியாநின்றான்.

    மூன்றிற்கும் வாசிக்கிறான் என்பதே பொருள்.

    வாசிப்பவனின் பாடல் அல்லது ஏதேனும் ஒன்றிலுள்ள குறிப்பின் பொருளை அறியாமல் அரசவையில் இருப்பவன் நல்ல மரம் என்பதுதான் ஔவை சொல்லும் செய்தி.

    வாசிக்காமல் நிற்கும் ஒருவனின், ஒன்றின் குறிப்பறிதல் இயலாததன்றோ?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! மூலத்தில் அவை நடுவே என்றுதான் உள்ளது. வாசியா நின்றான் என்பதற்கு வாசிக்கிறான் என்று பொருள் கொள்ளவேண்டும் என்று விளக்கியமைக்கு நன்றி!

      நீக்கு